Sunday, September 18, 2011

2002 கலவரத்தின் வலியை நான் உணர்ந்துள்ளேன்: மோடி


குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் வலியை தாம் உணர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ந்ரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

உண்ணாவிரத மேடை முன் அமர்ந்து இருந்த தமது ஆதரவாளர்களிடையே பேசிய மோடி கூறியதாவது:

உலகம் இன்று குஜராத்தின் வளர்ச்சியை பற்றி பேசுகிறது.அது தொழில் துறையாகட்டும், வேளாண்மை ஆகட்டும், கிராமப்புற, கல்வி அல்லது சுகாதாரத்துறை எதுவானாலும் குஜாரத்தை பற்றிதான் பேச்சு.

மேலும் குஜராத் மாநிலத்தின் நிர்வாக திறமை குறித்தும் உலகம் பேசுகிறது.குஜராத் மாதிரியான வளர்ச்சியைப் போன்றே அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்றவற்றை பேணுவதிலும் குஜராத்தை சுட்டிக்காட்டி பேசப்போகும் நாளும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று கூறினார் மோடி.

அதே சமயம் தமக்கு களங்கமாக இருக்கும் 2002 ஆம் ஆண்டு மதக்கலவரத்திற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்காத மோடி, மனிதாபிமான அளவுகோலிலிருந்து குஜராத் ஒருபோதும் சறுக்கியதில்லை என்றார்.

"அந்த நேரத்தில் (2002) இந்த கலவரங்கள் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில் நடக்கக்கூடாதவை என்று கூறியிருந்தேன்.அந்த நேரத்தில் கலவரத்தின் வலியையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் நான் உணர்ந்திருந்தேன். இப்போதும் கூட அந்த வலியை நான் உணர்கிறேன்.

1980 களிலிருந்து 90 ஆம் ஆண்டு வரை ஊரடங்கு, மதக் கலவரம் என தினசரி நிகழும் ஒரு நீண்ட பாதையை குஜராத் மாநிலம் கடந்துவந்தது.தற்போது அமைதியின் மதிப்பை குஜராத் மாநிலம் உணர்ந்துள்ளது" என்று மோடி மேலும் பேசினார்.

Thursday, September 15, 2011

மாணவர்களுக்கான தேசிய அமைப்பு


கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வு பிரச்சாரம் 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த தேசிய குழு தீர்மானித்தது. இதனடிப்படையில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.


தமிழகத்தில் பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் மக்கள் உரிமைகளுக்காக போரடுவோம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ். முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் நடைப்பெறும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றால் சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் இவற்றிற்கு எதிராக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மாணவ சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


NCHRO வின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், மாணவர்களின் சக்தி குறித்தும் உலகில் நடந்த அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்தும் பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் பத்திரிக்கைத்துறை ஆதிக்கசக்திகளின் கைகளில் சிக்கியிருப்பதையும், மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில் கார்ப்பரேட் மீடியாக்களின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.


கேம்பஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் அதிரை Z. முஹம்மது தம்பி தனது முடிவுரையில் நாளைய இந்தியாவை வழிநடத்த போகும் தலைவர்களான மாணவ சமூகம் மக்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லையெனில் நம் தேசம் அடிமைகளின் தேசமாக மாறிவிடும். எனவே நம் உரிமைகளை அறிந்து அவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் சபதமேற்று போராட வேண்டும் என கேட்டுகொண்டார். மாநில குழு உறுப்பினர் S. ஜமீஷா தீர்மனங்களை வாசித்தார்.முன்னதாக கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை மாவட்ட தலைவர் எஸ். ஹனீஃப் கான் வரவேற்புரையாற்றினார், நிறைவாக கேம்பஸ் ஃப்ரண்டின் மாவட்டச் செயலாளர் M. முஹம்மது நிசாருதீன் கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.


இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை சட்டக் கல்லூரி யூனிட் செயலாளர் சுலைஹா பர்வீன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
-தம்பி