Thursday, April 7, 2011

ADMK


நத்தம் கோபால்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட நடிகர் வடிவேலுவால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் க.விஜயனை ஆதரித்து, நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார்.

அப்போது வடிவேலு பேசும்போது,   ‘’தி.மு.க.,வை ஆதரித்தால் உங்கள் இல்லங்களில் விளக்கு எரிந்து சுபிட்சம் உண்டாகும். 

எதிரணியினர் பேச்சை கேட்டு நன்றி மறந்தவர்களாக இருக்க வேண்டாம். எனவே, உங்கள் ஓட்டை விசுவநாதனுக்கு (அ.தி.மு.க., வேட்பாளர்) போடுங்கள்’’ என்றார்.
வடிவேலுவின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.   திமுகவினர் ஆவேசமடைந்து  சப்தம் போட்டதால், சுதாரித்துக்கொண்ட வடிவேலு, க.விஜயனுக்கு ஓட்டுப் போடுங்கள் என மாற்றி கூறினார்.
வடிவேலுவின் பேச்சால் கூட்டத்திற்கு வந்த திமுக தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.
 
நன்றி : அதிரை நியூஸ்.

Wednesday, April 6, 2011

ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை

சென்னை: "ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்' என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் !

அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.  இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும்.
அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

24 மணி நேர உண்ணாவிரதம் (நோன்பு) இதய நோய்களை குறைக்கும்

fasting
மாதத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடித்தால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உண்ணாவிரதம் தொடர்பாக யுடா பகுதியைச் சேர்ந்த 200 நபர்களின் ஆரோக்கியம் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது நடத்தப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களில் 75 சதவீதத்தினருக்கு ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் குறுகி இருப்பது தெரியவந்தது.
ஆர்ட்ரிஸ் ரத்தக்குழாய்கள் இதயத்தில் இருந்து உடலின் இதர உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய் ஆகும். ஆர்ட்ரிஸ் குழாய்கள் குறுகினால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படலாம். அடிக்கடி உணவை தவிர்த்த நபர்களில் 63 சதவீத பேருக்கு ஆர்ட்ரிஸ் குழாய் அடைப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
உண்ணாவிரதத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்வதால் நீரிழிவு விகிதத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. உண்ணாவிரதம் மேற்கொள்ளாத நபர்களிடம் இரண்டாவது கட்ட சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதம் இருப்பதால் மனித வளர்ச்சிக்கு தேவையான ஹோர்மோன் குறிப்பிட்ட அளவு தூண்டப்படுகிறது. மனித உடலில் வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. கொழுப்பு குறைவதால் இதய நோய்களை தவிர்க்கலாம்.
இது ஆயிவில் கூறபட்ட தகவல் ஆனால் இதை நோன்பு என்றும் இதனை வருடத்தில் ஒரு மாதமும், மாதத்தில் மூன்று நாள்களும் கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியத்துடனும், மற்றவர்களின் பசியை உணரக்கூடிய மன நிலையும் அதனால் மற்றவர்களின் கஷ்டத்திற்கு உதவும் மனோபக்குவமும் உண்டாகும் என்று இஸ்லாமியர்களின் இறுதி தூதர் முஹம்மது நபி 1400 வருடத்திற்கு முன்பே கூறியிருக்கிறார்கள் அதை தான் இன்று ஆய்வில் கண்டு பிடித்தும் உள்ளார்கள்.

அதிரை அல்-அமின் பள்ளிவாசல் பொதுக்கூட்டம்......

 முஸ்லிம் மலர் வாசகர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,
  • நேற்று அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை அல்-அமின் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். PFI   மற்றும் தமுமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆலிம்கள் மற்றும் அல்-அமின் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  
  • ஆரம்பம் அல்ஹம்து சூராவுடன் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கியது. அமிராக அன்சாரி (குலாப்ஜான்) தேர்தெடுக்கப்பட்டார்.   
  • இதில் நில வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அல்-அமின் பள்ளி பிரச்னை தீர்த்து வைப்போம் எங்களுக்கு ஆதரவளியுங்கள்  என்று நச்சரித்து வருகின்றனர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது அப்போது சில சகோதரர்கள் வாக்குறிதிகளை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கவேண்டும் என ஆலோசனையை முன்வைத்தனர்.
தீர்மானங்கள்:
  1. அல்-அமின் பள்ளி பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  2. தொடர்ந்து அல்-அமின் பள்ளிக்கு இடையுறு செய்யும் திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் வாக்களிக்க கூடாது.நீங்கள் விரும்பியவர்களுக்கு திமுகவை தவிர வாக்களிக்கலாம்.
  3. எந்த முறையில் அல்-அமின் பள்ளி தொடர்பாக வாக்குறிதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என மனப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
  4. பேரூராட்சியில் திமுக சார்பில் உள்ள உறுப்பினர்களே உள்ள நிலையில் நமதூரிலுள்ள சமூக அக்கறையுள்ள இளைஞர்களை பேரூராட்சி தேர்தலுக்கு சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.          
  5. வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O என்ற விண்ணப்பதை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த பட்டது.

Sunday, April 3, 2011

தெற்கு ஜாவாவில் கடும் நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் முக்கியத் தீவான ஜாவா தீவின் தெற்குப் பகுதயில் திங்கள் கிழமை காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு ஜாவா தீவின் தெற்குப் பகுதியில் இருந்து 318 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் இது 6.7ஆகப் பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் துறை கூறியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவிளான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பெரிய மசூதி உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.


நன்றி : இந்நேரம்.com

கடலூர் குட்டி குஜராத்தாக மாறும்! பாஜக

கடலூர்: பல்வேறு அதிரடி திட்டங்களின் மூலம் கடலூரை குட்டி குஜராத்தாக மாற்றும் திட்டம் இருப்பதாக பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப் போகும் பா.ஜ.க  வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
மேலும்  சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க கடற்கரையோரமாக புன்னைமரங்கள் வளர்க்கப்படும். மேலும், கடலரிப்பை தடுக்கும் வகையில் கருங்கற்களும் கொட்டப்படும். கடந்த நான்கு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ள பாதாள சாக்கடை திட்டம் விரைந்து முடிக்கப்படும். சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபடுதலை கண்காணித்து கட்டுப்படுத்தப்படும். சாலை விதிகளை நெறிப்படுத்தி விபத்தில்லா நகரமாக மாற்றுவேன்.
கடலூர் ஆல்பேட்டையில் இருந்து அன்னவல்லி வரை பைபாஸ் சாலை அமைக்க பாடுபடுவேன். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி கடலூர் தொகுதியில் தடையில்லா மின்சாரம், குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதியை ஏற்படுத்தி கடலூர் தொகுதியை குட்டி குஜராத் ஆக மாற்றுவேன். தமிழக அரசு கொண்டு வந்துள்ள மருத்துவக்கல்லூரியை அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.
கடலூர் மக்களின் முக்கிய பிரச்ச்னையான குடிநீர் பற்றாக்குறையை போக்க தொழில்நுட்பத்துடன் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பா.ஜ.கட்சி வேட்பாளர் குணசேகரன் கூறியுள்ளார்.

நன்றி : இந்நேரம்.com

நடுவானில் விமானத்தில் விழுந்த ஓட்டை! பயணிகள் உயிர்தப்பிய அதிசயம்

வாஷிங்டன்:  நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் மேற்கூரையின் ஒரு பகுதியில் திடீரென ஓட்டை விழுந்ததால் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது உஷாரான விமானிகள் உடனடியாக விமானத்தை தரை இறக்கியதால் அதிலிருந்த 118 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று உள் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று கலிபோர்னியாவில் உள்ள சாகிராமெண்டோ நகருக்கு 118 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.. விமானம் புறப்பட்ட அரை மணியில் விமானத்தின் உள்பகுதியில் திடீரென காற்றழுத்தம் குறைவு ஏற்பட்டது. இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் விமானத்தின் கூரைப் பகுதியில் ஓட்டை இருப்பதை கண்ட பயணிகள் உடனடியாக விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த விமானம் யுமா என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் அதில் பயணம் செய்த 118 பயணிகளும் காயமின்றி  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள. இச்சம்பவம் அமெரிக்க விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குர்ஆன் பிரதி எரிப்பு:ஆப்கானிஸ்தானில் போராட்டம் தொடர்கிறது – ஒன்பது பேர் மரணம்

aghaie20110402081937530
காபூல்:அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் கிறிஸ்தவ புரோகிதர் ஒருவன் திருக்குர்ஆனின் பிரதியை எரித்ததை கண்டித்து ஆப்கானில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காந்தஹாரில் எதிர்ப்பாளர்களும்,போலீஸாரும் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஐ.நா தலைமையகம் மற்றும் மாகாண அரசின் முக்கிய அலுவலகங்கள் நோக்கி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததையடுத்து மோதல் வெடித்தது.
மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏராளமான அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தினர். ஆப்கானிஸ்தானில் தாலிபானின் தலைமையகமாக காந்தஹார் கருதப்படுகிறது. நகரத்தில் க்ரேனேடு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், நகரங்கள் முழுவதும் சேதமடைந்த வாகனங்களிலிருந்து புகை வெளிவருவதாகவும் எ.எஃப்.பி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
சம்பவம் தொடர்பாக இருநூறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மஷார்-இ-ஷெரீஃபில் நடந்த போராட்டம் மோதலாக மாறி போராட்டக்காரர்கள் ஐ.நா அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து எட்டு ஐ.நா பணியாளர்களை கொலைச் செய்தனர் .மஷார்-இ-ஷெரீஃபில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களின் துக்கத்தில் பங்கேற்பதாக ஒபாமா அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தூதுonlie.com

இளமையான தோற்றத்துடன் வளம் வர வேண்டுமா

fit man
அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே.
அதற்கு கடைபிடிக்க வேண்டியவைகள் மூன்று:
1. உணவு: உணவு என்றாலே நமக்குத் தெரிந்தது சாதம் தான். இது தவறு. நமது உணவை மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
சாதம் போன்றவை ஒரு பாகம் இருந்தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இருக்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும்.
நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பாத்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்டுகள் தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதில்லை.
காய்கறிகளிலும், பழங்களிலும் வயோதிகத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே போல் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பிட்டாலே போதும்.
2. உடற்பயிற்சி கட்டாயம்: நம் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று ஆர்வப்படும் அளவுக்கு அதற்காக நாம் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. தினம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அதை ஏதோ ஒரு பெரிய வேலையாக பலர் கருதுகிறார்கள்.
அவர்கள் உடல் இளமையாக இருக்காது. ஒரு நாளில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில் அரைமணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு மிதமான வியர்வை வரும் வரை பயிற்சிகள் செய்யலாம்.
வீட்டில் இருந்த படியே செய்ய முடிந்த சிறு சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இரண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச்சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.
3. மனம்: இளமைக்கு அடிப்படையான விஷயம் மனம். அது சந்தோஷமாவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனம் சரியில்லை என்றால் எதைச் செய்தாலும் இளமை வராது. உடலில் ஒரு களைப்புத் தெரியும். முதிர்வு வந்திடும். ஆனால் இன்றைய உலக சூழ்நிலையில் மனதை எப்பவும் சந்தோஷமாக வைத்திருப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயம். அதற்கு நமக்கு உதவுவது தியானம் மட்டுமே.
தினமும் அரைமணி நேரம் தியானம் பண்ண வேண்டும். காலையில் எழுந்ததும் கண்ணை மூடி உட்கார்ந்து முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார்ப்பது கூட ஒரு விதமான தியானம் தான்.
தியானம் செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமக்கு இளமையைக் கொடுக்கின்ற மெலோடோனின்ங் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இந்த விடயங்களை கடைபிடித்தால் உங்களுக்கு எவ்வளவு வயதானாலும் இளமையாகத் தான் தோன்றுவீர்கள்.

Saturday, April 2, 2011

28 ஆண்டுகளுக்குப் பின்... மீண்டும் சாம்பியன் : சொந்த மண்ணில் முதல் உலக சாதனை

மும்பை:கேப்டன் தோனி இமாலய சிக்சர் அடிக்க...இந்திய அணி உலக கோப்பையை "சூப்பராக' கைப்பற்றி, வரலாறு படைத்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தோனி (91*) மற்றும் காம்பிரின் (97) அபார ஆட்டம், கோப்பை கனவுக்கு கைகொடுத்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடந்தது. நேற்று மும்பையில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

ஸ்ரீசாந்த் வாய்ப்பு: இலங்கை அணியில் காயத்தில் இருந்து மீண்ட முரளிதரன் இடம் பெற்றார். இந்திய அணியில் காயமடைந்த நெஹ்ராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் இடம் பெற்றார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா,"பேட்டிங்' தேர்வு செய்தார்.

ஜாகிர் துல்லியம்: இந்திய "வேகங்கள்' துவக்கத்தில் போட்டுத் தாக்க , இலங்கை அணி ரன் எடுக்க திணறியது. ஜாகிர் வீசிய முதல் இரண்டு ஓவர்களும் "மெய்டனாக' அமைந்தன. மறுபக்கம் ஸ்ரீசாந்தும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

ஸ்ரீசாந்த் ஏமாற்றம்: "ரன் ரேட்' மிகவும் குறைய அதிரடிக்கு மாறினார் தில்ஷன். ஸ்ரீசாந்த் வீசிய போட்டியின் 6வது ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். படுமந்தமாக ஆடிய தரங்கா 2 ரன்களுக்கு(20 பந்து), ஜாகிர் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த சங்ககராவும், ஸ்ரீசாந்த் ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். ஹர்பஜன் சுழலில் தில்ஷன்(33) அவுட்டாக, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அப்போது இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து தவித்தது.

யுவராஜ் அபாரம்: பின் சங்ககரா, ஜெயவர்தனா இணைந்து பொறுப்பாக ஆடினர். அனுபவ வீரர்களான இவர்கள் துடிப்பாக ரன் சேர்த்தனர். இந்த நேரத்தில் யுவராஜ் சிங் திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது சுழலில் முதலில் சங்ககரா(48) சிக்கினார். அடுத்து சமரவீரா(21), "ரிவியு' முறையில் வெளியேறினார். ஜாகிர் வேகத்தில் கபுகேதரா(1) காலியானார்.

இரண்டாவது சதம்: அடுத்து வந்த குலசேகரா "கம்பெனி' கொடுக்க, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் ஜெயவர்தனா. இவர்கள் "பேட்டிங் பவர்பிளேயை' பயன்படுத்தி அதிரடியாக ரன் சேர்த்தனர். ஜாகிர் வீசிய போட்டியின் 48வது ஓவரில் குலசேகரா ஒரு இமாலய சிக்சர்(87 மீட்டர் தூரம்) அடித்தார். மறுபக்கம் ஒரு பவுண்டரி அடித்த ஜெயவர்தனா, இத்தொடரில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 14வது சதம். குலசேகரா (32) ரன் அவுட்டானார். ஜாகிர் வீசிய போட்டியின் 50வது ஓவரில் பெரேரா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, ஒட்டுமொத்தமாக 18 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவரில் மட்டும் 63 ரன்கள் எடுக்கப்பட, இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்öட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. ஜெயவர்தனா(103), பெரேரா(22) அவுட்டாகாமல் இருந்தனர்.

மலிங்கா மிரட்டல்: அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே "ஷாக்' கொடுத்தார் மலிங்கா. இவரது இரண்டாவது பந்தில் சேவக் "டக்' அவுட்டானார். இது தொடர்பாக "ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. குலசேகரா ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின் நம்பிக்கை தந்தார். இந்த நேரத்தில் மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா, சச்சினையும்(18) அவுட்டாக்கி பேரதிர்ச்சி கொடுத்தார். பிறந்த மண்ணில் 100வது சதம் காண்பார் என எதிர்பார்த்த நிலையில், உள்ளூர் ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்து, வெளியேறினார் சச்சின்.

காம்பிர் அதிர்ஷ்டம்: பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து கலக்கலாக ஆடினர். காம்பிர் பக்கம் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. இவர் 30 ரன்களில் இருந்த போது "கேட்ச்' வாய்ப்பை குலசேகரா நழுவிட்டார். பின் "ரன் அவுட்' வாய்ப்பிலும் தப்பிய இவர், ஒரு நாள் போட்டிகளில் தனது 25வது அரைசதம் கடந்தார். தில்ஷன் பந்தில் அவரது சூப்பர் "கேட்ச்சில்' விராத் கோஹ்லி(35) அவுட்டானார்.

வெற்றி கேப்டன்: அடுத்து வந்த தோனி ஒத்துழைப்பு தர, தனது அபார ஆட்டத்தை தொடர்ந்தார் காம்பிர். முதுகு வலியை பொருட்படுத்தாது "கேப்டன் இன்னிங்ஸ்' விளையாடிய தோனி, முரளிதரன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, ஒரு நாள் போட்டிகளில் தனது 38வது அரைசதம் கடந்தார். இந்த நேரத்தில் பெரேரா பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பர்(97) பரிதாபமாக போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார்.

இரண்டாவது கோப்பை: தொடர்ந்து பெரேரா பந்தை சிக்சருக்கு விரட்டிய தோனி, இந்திய ரசிகர்களை குஷிப்படுத் தினார். "பேட்டிங் பவர்பிளேயில்' யுவராஜும் பவுண்டரிகளாக விளாசி, வெற்றியை உறுதி செய்தார். குலசேகரா பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. தோனி(91), யுவராஜ்(21) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல்முறையாக அசத்தல் : சொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

Friday, April 1, 2011

இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரம் வெளியீடு

இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான் , வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.


நன்றி: முத்துபேட்டை.org

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லகாலம் பொறந்திருக்கு

நீண்ட நாட்களுக்கு முன் நக்கீரனில் படித்த ஞாபகம். சர்க்கரை நோய்க்கு மருந்து கிடைப்பதாகவும் தற்பொழுது நமதூரில் பலபேர் சென்று மருத்து வாங்கி சாப்பிட்டு நலமாக இருப்பதாகவும் கேள்விபட்டேன். நமதூர் பைத்துல்மால் சார்பாகவும் சர்க்கரர மருத்து  கொடுக்கும்  அம்மருத்துவரை  அழைத்து வந்து ஐம்பது நபருக்கு மருந்து கொடுத்திருகிறார்கள்.

சர்க்கரை நோய்க்கு எளிய இந்த இயற்கை மூலிகை மருந்து  சதீஸ்கர் மாநிலம் - துர்க் என்ற ஊரில் கிடைக்கிறது.

சர்க்கரை நோயினால் அவஸ்தைப்படும் அதிரை சகோதர, சகோதரிகளுக்கு ஒரு நல்ல செய்தி இங்கே போய் வைத்தியம் பார்த்தவர்கள் நலமாக இருப்பதாக சொன்னார்கள்.

சதீஸ்கர் மாநிலம் - துர்க் சென்று அடைத்தவுடன் மருந்து கொடுக்கும் ஜும்மா மசூதி சென்று முன் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவேண்டும்.

காலை எழுந்த உடன் பல் துலக்கி, (பேஸ்ட் போட்டு பல் துலக்கக்கூடாது ) குளித்து முடித்து, வெறும் வயற்றில் தண்ணீர் கூட குடிக்காமல் காலை7 மணியளவில் மசூதிக்கு சென்று அமர்துவிட வேண்டும்.

முன்பதிவு நம்பர் படி அழைத்து உள்ளங்கை அளவிற்கு மருந்து தருவார்கள். அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டியபின் அதில் பாலை ஊற்றி மருந்து தீரும் வரை குடிக்கச் செய்கிறார்கள் குடித்த பின் ஒரு வாய் தண்ணீர் கொடுத்து உட்கார வைக்கிறார்கள்.

கூறும் அறிவுரைகள் : மருந்து சாப்பிட்டபின் தொடர்ந்து 4.00 மணி நேரத்திற்கு தண்ணீர் உணவு, புகைபிடித்தல் போன்றவை கண்டிப்பாக எடுத்துகொள்ளக்கூடாது. 4.00 மணி நேரம் கழித்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்த சாப்பாடு அனைத்தும் வயறு நிறைய சாப்பிடவேண்டும் .

பத்தியம்:

உணவில் புளி, கத்தரிக்காய், மாங்காய் கண்டிப்பாக இரண்டு மாதங்களுக்கு சேர்த்துக் கொள்ள கூடாது.

மருந்து குடித்த பின் ஏற்படும் உமிழ்நீர் ஓமட்டலுடன் கூடிய உமிழ்நீர் ஆகியவற்றை கண்டிப்பாக துப்பக் கூடாது. இருமல் ஏற்பட்டு அதனால் வரும் சளியை துப்பலாம்.

வீட்டிற்கு சென்ற பின் சர்க்கரை அளவு உயர்வு தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் நீங்கள் பயன்படுத்தி வந்த சர்க்கரை மாத்திரையை உட்கொண்டு அதன் பின் சுத்தமாக சர்க்கரை மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

30 நாட்களுக்கு பிறகு சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்ளவும் அதில் சர்க்கரை அளவு நார்மலுக்கு வந்திருப்பதை காண்பீர்கள்.

இன்சுலின் பயன்படுத்துபவர்கள் சூரண மருந்தை இரண்டு நாட்களுக்கு சாப்பிடவேண்டும்

மருத்துவத்துக்காக சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் செல்பவர்கள் ஹிந்தி தெரிந்தவர்களுடன் சென்றால் மிகவும் நலம்.

இச்செய்தியின் நம்கத்தன்மையை உறுதி செய்யவேண்டியது அவசியம். இந்த மருத்துவம் பற்றி யாராவது கேள்வி பட்டால் இங்கு உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

ஆங்கில மருத்துவத்தின் ராசாயன கலவை மருந்துக்களால் குணப்படுத்த முடியாத நோய்களை மூலிகை மருந்துக்கள் குணப்படுத்தியுள்ளதை செய்தி ஊடகங்களில் நாம் காணமுடிகிறது. சிலர் வியாபார நோக்கத்தின் பெயரில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி வந்து முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால், இயற்கை மூலிகை மருத்துவத்தை மக்கள் "போலி" என்ற மனநிலையிலேயே இன்னும் உள்ளார்கள்.

தீராத நோய்களுக்கு இவ்வுலகில் மருத்துக்கள் உள்ளது. மக்கள் மனது மாறவேண்டும். இயற்கை மருத்துவத்தில் இது அதிகம் சாத்தியம். சகோதரர் ஜாஹிர் அவர்கள் எழுதியது போல் மருத்துவ சேமிப்பு திட்டம் தீட்டி செயல்படுத்தி நோய்களுக்கு செலவழிக்க நினைத்தாலும் நம் வருமானம் போதாது இந்த நவீண மருத்துவ வியாபாரயுகத்தில்.

சர்க்கரை நோய் தொடர்பான மேலும் நல்ல பதிவுகளை அதிரைநிருபரில் பதியுமாறு அன்புடம் கேட்டுக்கொள்கிறேன்.

--அபு இஸ்மாயில்
 
நன்றி : அதிரை நிருபர்

வாக்குபதிவு நேரம் மாற்றம்



தமிழகத்தில் வாக்குப் பதிவு நேரம் மாற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்பட்டடு வந்தது.

இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்.

இந்தியா-பாக்.கிரிக்கெட்- 3 பேர் பலி

காஸியாபாத்(உ.பி):நேற்று முன்தினம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் மோதும் போட்டி என்றாலே ஏதோ போர் நடப்பதாக எண்ணிக் கொண்டு இரு நாட்டு ரசிகர்களும் பதட்டத்தோடு கண்டு ரசிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்தியா இப்போட்டியில் வென்றதைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டங்கள் உள்நாட்டில் மட்டுமல்ல இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளிலும் நடந்தேறின.
‘விளையாட்டு வினையில் முடியும்’ என்பதற்கேற்ப, அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுறும் எனக்கூறிய கடை உரிமையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
விஷால் குப்தா என்ற நபர்தாம் கொல்லப்பட்டவர்.
இந்தியா பேட்டிங்கை நிறைவுச்செய்த வேளையில் இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் என விஷால் கூறியுள்ளார். அப்பொழுது கடையில் தொலைக்காட்சியில் போட்டியை கண்டுக்கொண்டிருந்த சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக போலீஸ் கூறுகிறது.
இந்தியா வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து போட்டியை கண்டு ரசித்தவர்கள் பட்டாசுக் கொளுத்தி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பிறகு குப்தாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளதை கண்ட சிலர் அவரை மருத்துவமனையில் சிகிட்சைக்காக கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் கொண்டு  சென்ற உடனேயே அவர் இறந்துவிட்டார்.
கொலைக்கு பின்னணியில் என்ன காரணம்? என்பது தெளிவாக தெரியவில்லை என நகர எஸ்.பி ஜெகெ ஸஹி தெரிவித்துள்ளார். விசாரணை நடந்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் நூர் நகரில் சுஷில்குமார் என்பவருக்கும் குண்டடிப்பட்டது. இவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்.
இந்திய அணி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கிழக்கு டெல்லியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டவேளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார்.