Monday, February 28, 2011

ஒமானில் 3-வது நாளாக தொடரும் போராட்டம் - 6 பேர் பலி

மஸ்கட்,பிப்.28:தொழில் நகரமான ஸோஹாரில் அரசுக்கெதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நொறுக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசும், கலவரத் தடுப்பு படையும் நடத்திய துப்பாகிச்சூட்டில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு நாளாக அமைதியான முறையில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது எனவும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கெதிராக பலம் பிரயோகிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சி உறுதிச் செய்துள்ளது.

முகமூடி அணிந்த இளைஞர்கள்தாம் தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர். போலீஸ் மற்றும் மஜிலிஸுஸ்ஷூராவின் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.

ஸோஹாரில் கவர்னரின் அலுவலகம், நகராட்சியின் தொழில்நுட்ப அலுவலகம், போலீஸ் ஸ்டேசன், லேபர் அலுவலகம், ஒரு ஆயில் டேங்கர், பெட்ரோல் ஸ்டேஷன் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

மஸ்கட்-துபாய் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.ஒமானின் இரண்டாவது பெரிய நகரமான ஸலாலாவிலும் போராட்டம் பரவியுள்ளது.

ஒமானில் வரம்பு மீறிய ஊழலும், மோசமான பொருளாதார சூழலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஜனநாயகம் வேண்டும்! ஷூரா கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும்!நீண்டகாலமாக ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் வெளியேற வேண்டும்! வேலை வேண்டும்! போன்ற கோரிக்கைகள் போராட்டத்தின்போது எடுத்துரைக்கப்பட்டன.

ஒமானில் அரசியல் கட்சிகள் செயல்படுவது தடைச் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் மேலும் பரவாமலிருக்க அந்நாட்டு மன்னர் காபூஸ் 6 அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.

---பாலைவனத் தூது---

No comments:

Post a Comment