Tuesday, February 15, 2011

பயணக்காசு

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்டிருக்கும் நமதூர் அதிரையில் காலங்காலமாக நடைமுறையிலிருந்து தற்போது வழக்கொழிந்து அல்லது அரிதாகிப் போன சில பழக்க வழக்கங்கள் குறித்த தொகுப்பு. மார்க்கரீதியில் சரியா தவறா என்ற ஆய்வுக்குச் செல்லாமல், இவற்றினால் நமக்கேற்பட்ட விளைவுகளை/இழப்புகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்டது.


நினைவில் நிற்கும்/நின்ற தகவல்களைத் திரட்டி கொஞ்சம் குத்துமதிப்பாக தொகுத்துள்ளேன். வாசகர்களும் இணைந்தால் அதிரை முஸ்லிம்களின் பாரம்பர்ய வாழ்க்கைமுறைகள், பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

****

வெளிநாட்டுக்கு அல்லது நெடுந்தூர பயணம் செல்பவர்கள்,சொந்தக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு பயணம் சொல்லிப் போகும்போது, பயணம் சொல்லி வந்திருப்பவருக்கு டீ, காஃபி குளிர்பானங்களுக்குப் பதிலாக பால் அருந்தக் கொடுப்பர்.

(இரண்டு பார் அருணா சோப் வாங்கினாலோ அல்லது நான்குபார் BCC நீலம் வாங்கினாலோ ஒரு அழகிய பூப்போட்ட கண்ணாடி கிளாஸ் இலவசமாகக் கொடுத்தார்கள்.ஏரியலும் உஜாலாவும் வந்தபிறகு இலவச கண்ணாடிகிளாஸ் ஒழிந்துவிட்டது :(. அத்தகைய கண்ணாடி கிளாஸ் நிறைய பாலிருக்கும்போது, பாலின் வெள்ளைப் பின்னணியுடன் அதில் பிரிண்டாகியிருக்கும் பூக்களை ரசிக்க கலைக்கண்கள் இருக்க வேண்டும்;)

நடுவீட்டில் நாற்காலியில் அல்லது வயதானவர்கள் படுத்திருக்கும் கட்டிலில் உரிமையாக ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து, "பெரியம்மா / வாப்புச்சா / அப்பா இன்ஷா அல்லாஹ் நான் சவூதி போறேம்மா. துஆ செய்யிங்க" எனும்போது கண்ணீர்மல்க "யான் வாப்பா போறேன்னு சொல்றே?போயிட்டு வர்ரேன்னு சொல்லுமா" என்பதோடு, காசுபணம் முக்கியமில்லே வாப்பா! சதுரவாழ்வைப் பார்த்துக்குங்க" என்று "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை சொல்லாமல் சொல்வர்.

"போறேன்" என்பதை புறப்படுகிறேன்/போயிட்டு வர்ரேன் என்று சொல்லுமா என்று பிழைதிருத்தியது மூடநம்பிக்கையினால் அல்ல; ஒரேடியாகப் போகும் மீளாப்பயணமான மரணத்தைக் குறிக்கும் என்ற நம்பிக்கையே காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன். இவ்வாறு சொல்லிவிட்டு, "நீ நல்லபடியாக சம்பாதித்து திரும்பி வரும்போது நான் ஹயாத்தா ஈக்கிறேனோ மவுத்தோ?" என்ற ஏக்கப்பெருமூச்சில் "மவுத்தையே நீ மறக்கலாகுமோ?" என்ற சிந்தனை மேலோங்கியதாகவே நினைக்கிறேன்.

ஒன்னும் கவலைப்படாதியம்மா/ப்பா. இன்ஷா அல்லாஹ் நீங்க ஆசைப்பட்ட மேத்துண்டு/பத்தாயக்கைலி/துப்பட்டி/மார்ட்டின் சட்டை/செண்டு இவற்றில் எதில் அதிகப்பிரியமோ அதைக் குறிப்பிட்டு யாராவது வெகேசன் வந்தால் மொதவேலையா அதை உங்களுக்கு குடுத்தனுப்புறதுதான்" என்று பாசமழை பொழியும்போது, அருகில் நிற்கும் குழந்தைகளும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை மறக்காமல் அனுப்பும்படி கேட்கும் அழகே தனிதான் போங்க!

நானெல்லாம் சிறுவனாக இருக்கும்போது சவூதியிலிருந்து எங்கள் மாமா வெகேசனில் ஊர்வரும்முன் என்ன வேண்டும்? என்று கேட்கும்போது, கல்லு குச்சி டப்பா (காந்தம் வைத்தது:) அல்லது ஜாமெண்ட்ரி பாக்ஸ், மணக்கும் அழி ரப்பர், பைலட் பேனா என்று கேட்டது பசுமையாக நினைவிலுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு மூன்றுவயது மகனிடம் "உனக்கு என்னம்மா கொண்டுவர என்று கேட்டு வாய்மூடுவதற்குள் "கம்யூட்டர் வேணும்" என்று சொன்னபோது, உலகமயமாக்களின் தாக்கத்தை நொந்து கொண்டேன் :)

இப்படித்தான்டா சொல்லவந்ததை விடுத்து எங்கெங்கோ செல்வான் என்று நண்பன் தஸ்தகீர் நினைக்கக்கூடும் என்பதால் பயணக்காசு விசயத்திற்கே வந்துவிடுகிறேன். ஸலாம் சொல்லி புறப்படும்போது சிறார் சிறுமிகளுக்கு கசங்காத ரெண்டு ரூபாய் சலவை நோட்டையும், பெரியம்மா/அப்பாக்களுக்கு பத்து ரூபாய் காந்தி நோட்டு (அப்போதெல்லாம் காந்தி நூறு ரூபாத்தாளில் மட்டுமே சிரிப்பார் என்று நினைக்கிறேன்) ஒன்றும் பயணக்காசு கொடுப்பது வழக்கம்.

வசதியுள்ள சில பெரியவர்கள் முதன்முதலாக சம்பாதிக்கச் செல்பவரிடம், தங்களிடமுள்ள பாக்கட்மணியிலிருந்து (தமிழில் எப்படி சொல்வது? :)  ஒரு நோட்டை எடுத்து,இந்தாமா பிஸ்மி சொல்லி இதவச்சுக்க, பினாங்கில் / கொழும்பில்/ரங்கூனில் நான் சம்பாதித்த மொதமாதச் சம்பளம் இதுதான்" என்று சொல்லி பயணம் சொல்ல வந்தவருக்கே பயணக்காசு கொடுக்கும் பெருங்கைகளும் அதிரையில் இருந்தனர்.

ஹும்..அதெல்லாம் ஒருகாலம். சிங்கப்பூர் மலேசியா வளைகுடா நாடுகளில் பொருளீட்டச் செல்பவர்களுக்காவது பயணம் சொல்லிப் போக, பயணக்காசு கொடுக்க, குறைந்தபட்சம் முதியவர்களை நலம்விசாரித்து அவர்களின் துஆக்களையும் ஆசிகளையும் பெறுவதற்க்கெல்லாம் காலநேரஅவகாசம் இருக்கிறது.யூரோப்,யூஎஸ் ஆஸ்திரேலிய........நாடுகளில் நம்மூர் 'குதிரை வேட்டி' தென்பட ஆரம்பித்த பிறகு, வெளிநாட்டுப் பயணங்கள் பரம ரகசியம் ஆகிப்போய் பயணக்காசு பண்பாடு, வழக்கொழிந்துபோய் செல்லாக்காசாகி விட்டதாகவே நினைக்கிறேன்.


அன்புடன்,

அபூஅஸீலா


"பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை


அருளில்லாருக்கு அவ்வுலகில்லை -


பெற்றோர்-பெரியோர் ஆசியின்றி


பொருள் தேடுவோருக்கு எவ்வுலகுமில்லை"

No comments:

Post a Comment