Sunday, February 27, 2011

கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தடை

நியூயார்க்,பிப்.28:ஜனநாயக ரீதியில் கிளர்ச்சியில் ஈடுபடும் போராட்டக்காரர்களை அடக்குமுறை மூலமாக நசுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, அதிபர் முஅம்மர் கதாஃபி தலைமையிலான லிபிய அரசு மீது தடை விதித்துள்ளது ஐநா பாதுகாப்பு கவுன்சில்.

இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்த அமைப்பு இந்த தடைக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது.

ஆயுத விற்பனைக்குத் தடை, கதாஃபி வெளிநாட்டுப் பயணத்துக்கு தடை, அவரது சொத்துகளை முடக்குவது உள்ளிட்டவை இந்த தடையில் அடங்கும் லிபிய அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து 2 வாரமாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மக்களின் எழுச்சியை தனது ஆதரவு படைகள் மூலமாக ஒடுக்கி வருகிறது கதாஃபி அரசு. அரசின் அடக்குமுறையில் சுமார் 1000 புரட்சியாளர்கள் உயிரிழந்தனர்.

கதாஃபியின் ஆட்சிக்கு முடிவு காணும் நோக்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்காவின் தூதர்கள் லிபியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் இறங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்மானம் மீது பொதுக்கருத்து எட்டப்பட்டு அது ஏற்கப்பட்டது.

68 வயது கதாஃபி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளை முடக்குவது, அவர்களும் அவரது ஆட்சித் தலைவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது, ஆயுதத்தடை விதிப்பது, மனித குல அழிவில் ஈடுபட்டதாக கதாஃபி மீது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க கோருவது உள்ளிட்டவை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி, போராட்டக்காரர்களை ஒடுக்க படைகள் பயன்படுத்தப்பட்டது ஏற்கக்கூடியது அல்ல என்றார்.

லிபியாவில் உள்ள இந்தியர்களின் உடமைக்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது என்றார்.

லிபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது அந்த நாட்டின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். போராட்டக்காரர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை லிபியா உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனது சொந்த மக்களையே படைகளை பயன்படுத்தி கொன்று குவிக்கும் கதாஃபி, ஆட்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கலை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, 27 நாடுகள் அமைப்பான ஐரோப்பிய யூனியன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.

கதாஃபிக்கு எதிரான இந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

---பாலைவனத் தூது---

No comments:

Post a Comment