Monday, March 21, 2011

சிறுபான்மையினர் நண்பன் தி.மு.க.,வா...? அ.தி.மு.க.,வா...?

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., – அ.தி.மு.க., என, இரு அணிகளிலும் முஸ்லிம் அமைப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், உண்மையில் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. முஸ்லிம் லீக்கில் பெரும் பகுதியினர் திடீரென தி.மு.க.,வுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது. உதயசூரியன் சின்னத்தில் தான் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், த.மு.மு.க.,வின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களில் தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.இரு புறமும் முஸ்லிம் அமைப்புக்கள் உள்ள நிலையில், உண்மையில் முஸ்லிம்கள் யாருக்குத் தான் ஆதரவு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முஸ்லிம் லீக் நிர்வாகி கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் முஸ்லிம்களின் 80 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு, சிறுபான்மை பள்ளி, கல்லூரிகளுக்கு சலுகைகள், அரசு உதவி, பள்ளிவாசல் உலமாக்களுக்கு நல வாரியம், சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2,000 இளைஞர்களுக்கு இலவச ஆட்டோக்கள், இரண்டு முஸ்லிம் களுக்கு கடந்த ஆட்சியில் மந்திரி பதவி என முஸ்லிம்களுக்கு தி.மு.க., ஆட்சியில் நல்லது நடந்துள்ளது.அதே நேரத்தில் முஸ்லிம் லீக்குக்கு தனியான அரசியல் அங்கீகாரம் கிடைக்காத அளவுக்கு தி.மு.க., அவமதிப்பதும் தொடர் கதையாக உள்ளது.
முஸ்லிம் லீக்குக்கு கடந்த தேர்தலில் மூன்று தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, திடீரென பாளையங்கோட்டைக்கு தி.மு.க., வேட்பாளரை அறிவித்தது. “டிவி’ பார்த்து தான் விஷயம் எங்களுக்கே தெரிந்தது.இம்முறை பா.ம.க., – வி.சி., – கொ.மு.க., கட்சிகளுக்கு அதிக சீட் தந்த தி.மு.க., சிறுபான்மையின நண்பனான எங்களுக்கு மூன்று சீட்டை கொடுப்பது போல் கொடுத்து, டில்லியிலிருந்து ஒன்றை பிடுங்கினர். மாநிலத் தலைவரை கூட கலந்தாலோசிக்காமல், தகவலாகத் தான் சொன்னார்கள்.இரண்டு சீட்டில் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு செய்துள்ளனர். தி.மு.க.,வை பொறுத்தவரை முஸ்லிம் லீக்குக்கு தனி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு கொடுத்தால் மட்டுமே அவர்களை சிறுபான்மை நண்பனாக நினைப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தி.மு.க., ஆட்சி ஏன் வரக்கூடாது என்பது குறித்து, முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:அ.தி.மு.க.,தான் சட்ட ரீதியான கமிஷன் அமைத்து முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற வழி வகுத்தது. சிறுபான்மையினர்களின் நண்பன் என கூறிக் கொள்ளும் கருணாநிதி ஆட்சியில் தான் முஸ்லிம்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர். நடுநிலையுடன் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்த போது, அப்துல் சமது தலைமையிலான முஸ்லிம் லீக்கை, தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் என்பதால், அப்துல் லத்தீப் பிரிவு என தி.மு.க.,தான் இரண்டாக உடைத்தது.முதற்கட்டமாக முஸ்லிம்களின் ஒற்றுமை இதில் உடைந்தது. ஆளாளுக்கு முஸ்லிம் லீக் பெயரில் கட்சி துவங்க தி.மு.க., வழி வகுத்தது.
பா.ஜ.,வை மதவாத கட்சி என்ற தி.மு.க., பா.ஜ.,அரசுக்கு மத்தியில் ஆதரவளித்தது. கோவையில் இருதரப்பினர் மோதியதில் கலவரம் ஏற்படும் என தெரிந்தும், தி.மு.க., ஆட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பின், தமிழகம் முழுவதும் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாயினர். வீடுகளில் இருந்த முஸ்லிம் பெண்கள் போலீசாரால் துன்புறுத்தப்பட்டனர். இதை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள்.
முஸ்லிம்களுக்கு 8 சதவீத இட ஒதுக்கீடு கேட்ட நிலையில், 3.5 சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு தந்ததால், முழுப் பயன் கிடைக்கவில்லை. முஸ்லிம் இளைஞர்களுக்கு இன்னும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் வெளிநாடுகளில் பிழைக்க வேண்டிய நிலை தொடர்கிறது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக தனி அங்கீகாரம் பெற தி.மு.க., எப்போதும் விரும்புவதில்லை. அதனால் தான் முஸ்லிம் லீக்கை எப்போதும் தன்னுடன் வைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 48 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் முழு ஆதரவு தங்களுக்கு தான் என மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாத் உட்பட பல அமைப்புகள், கட்சிகள் கூறுகின்றன.ஆனால், இவ்வளவு பிரச்னைகளையும் மனதில் வைத்து முஸ்லிம்கள் தங்கள் ஓட்டு யாருக்கு? எந்த இயக்கத்திற்கு, என்பதை முடிவு செய்வர். அந்த முடிவு தேர்தல் ரிசல்ட் வரும் போது தான் வெளிச்சத்துக்கு வரும்.- நமது சிறப்பு நிருபர் -தினமலர்

No comments:

Post a Comment