Wednesday, April 20, 2011

ஜெய்தாப்பூர்:முழு அடைப்பில் வன்முறை; பேருந்துகள் எரிப்பு

800_india_nuclear_protest_ap_110419

மும்பை:ஜெய்தாப்பூர் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து ரத்னகிரி மாவட்டத்தில் சிவசேனா அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு வன்முறையாக மாறியது.
முழு அடைப்புக்கு ஆதரவாளர்கள் மருத்துவமனைமீது தாக்குதல் நடத்தினர். ஏராளமான பேருந்துகள் தீக்கிரையாயின. திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணித்திருந்தார். போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டுமென மஹாராஷ்ட்ரா சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஏக்நாத் கத்ஸே வலியுறுத்தினார். துப்பாக்கிச்சூட்டிற்கு அரசு பெரிய விலை கொடுக்கவேண்டிவரும் என சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஆறு அணு உலைகள் அடங்கும் ஜெய்தாப்பூர் அணுமின் நிலையம் உலகின் மிகப்பெரிய அணுசக்தித் திட்டங்களில் ஒன்றாகும். முழு அடைப்பு வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ரத்னகிரி மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு மஹாராஷ்ட்ரா அரசு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் பலியான தப்ரேஸ் அப்துல் ஸயனேக்கரின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவமனையை முழு அடைப்பு ஆதரவாளர்கள் தாக்கினர். இவர்கள் ரத்னகிரி-கோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தடை ஏற்படுத்தினர். போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பின்னணியில் அரசியல் சதித்திட்டம் உள்ளதா? என்பதுக் குறித்து விசாரணை நடத்தப்படுமென உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட நபரின் உடலை அவருடைய உறவினர்களோ, ஊரைச் சார்ந்தவர்களோ பெற்றுக்கொள்ளவில்லை. அணுசக்தி திட்டத்தை முதல்வர் பிருதிவிராஜ் சவான் வாபஸ் பெறவேண்டும் என்பது அப்பிரதேச மக்களின் விருப்பமாகும்.
துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அதிகாரி அஜீத் பவாரை சஸ்பெண்ட் செய்து அவர் மீது கொலைக் குற்றம் சுமத்தி வழக்குப் பதிவுச்செய்ய அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment