Sunday, March 27, 2011

இந்தியா-சவூதி ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது: ஹஜ் ஒதுக்கீடு அதிகரிக்க முயலுவோம் – எஸ்.எம்.கிருஷ்ணா

 

SAM_1594-300x225
ஜித்தா:சவூதி அரேபியாவுடன் இந்தியா ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும்,சவூதி அரேபியா ஹஜ் துறை அமைச்சர் ஃபுவாத் அல்ஃபாரிஸியும் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தியாவிலிருந்து ஹஜ் செல்வதற்காக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் ஹஜ் ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமென சவூதி அரேபியா அரசிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
ஒதுக்கீடு அதிகரிப்பதுக் குறித்து அனுபவரீதியாக பரிசீலிப்போம் என சவூதி ஹஜ் துறை அமைச்சர் உறுதியளித்ததாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இந்தியாவிலிருந்து ஒரு கேபினட் அமைச்சர் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சவூதி அரேபியாவுக்கு வருகைத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஜிகளுக்கு உதவுவதற்காக,இந்தியாவிலிருந்து வருகை தரும் சேவைத் தொண்டர்கள் (வாலண்டியர்ஸ்) குறித்து புகார்கள் எழுந்துள்ள சூழலில், அனுபம் வாய்ந்த சவூதி அரேபியாவிலுள்ள இந்தியர்களை சேவைத் தொண்டர்களாக நியமிக்கலாமே? என எழுப்பிய கேள்விக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதிலளிக்கையில், சேவைத் தொண்டர்களை நியமிக்கும் விவகாரத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள்தாம் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இவ்வருடம் முக்கிய நகரங்களில் சேவைத் தொண்டர்களுக்கும், ஹாஜிகளுக்கும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். ஹஜ் நல்லிணக்க குழு அனுப்புவதால் அரசுக்கு பெருந்தொகை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும்,இந்தியா-சவூதி அரேபியாவுக்கிடையேயான நட்புறவு மேம்படுத்துவதற்கு இது பெரிதும் துணைபுரிவதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
இந்திய தூதரக அதிகாரி ஸஈத் அஹ்மத் பாபா,ஹஜ் தூதரக அதிகாரி பி.எஸ்.முபாரக், வெல்ஃபெயர் தூதரக அதிகாரி எஸ்.டி.மூர்த்தி ஆகியோரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment