Tuesday, March 8, 2011

அழகிரி - பிரணாப் சந்திப்பு!

தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளிடையே நிலவி வரும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தி.மு.க. அமைச்சர் மு.க. அழகிரி சந்தி்த்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிக்கொள்வதாக தி.மு.க. அறிவித்தது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தி.மு.க. அமைச்சர்கள் 6 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்காக திங்கள் கிழமையன்று டில்லி புறப்பட்டுச் சென்றனர்.

திங்கள் கிழமை காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அது 4 மணிக்கும், 6 மணிக்கும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் கால அவகாசம் கேட்டுள்ளதால் இன்று ராஜினாமா இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் இருந்தே தி.மு.க.-காங்கிரஸ் உறவு பற்றிய பரபரப்பு மீண்டும் தொற்றிக் கொண்டது. இரு கட்சிகளின் உறவை சரி செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர்கள் அழகிரி, பழனிமாணிக்கம் ஆகியோர் சந்தித்துள்ளனர். ‌காங்கிரசுக்கு ஒதுக்கக்கூடிய தொகுதி பட்டியல் ஒன்றை பிரணாபிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக திமுக எம்.பி.  டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக -காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்கிறது.  இன்று மாலைக்குள் முடிவு தெரியும் என்று தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீட்டு பிரச்சனைக்கு முதல்வர் கருணாநிதி தீர்வு காண்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக - காங்கிரஸ் உடன்பாட்டில் இழுபறி நீடித்துள்ளதைத் தொடர்ந்து அதிமுகவும் தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை முடிவு செய்யாமல் உள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment